Main Menu

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு

பாகிஸ்தானின் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இஸ்லாமாபாத் நோக்கிய தனது கண்டனப் பேரணியை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தன.

கட்சியின் நிறுவனர் இம்ரான் கானை விடுவிக்குமாறு அரசை வலியுறுத்தும் வகையில், தலைநகரை நோக்கி செப்டம்பர் 27 அன்று ஒரு நீண்ட பேரணியை (long march) தொடங்க பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சி அறிவித்திருந்தது.

இருப்பினும், போராட்டத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக அப்பேரணியைத் தள்ளிவைக்க அக்கட்சி முடிவு செய்ததாகத் தெரிகிறது.

73 வயதான இம்ரான் கான், ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ராவல்பிண்டியில் உள்ள பலத்த பாதுகாப்புடைய அடியால சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல வழக்குகளில் தண்டனை பெற்று 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், கான் தலைமையிலான பிடிஐ (PTI) கட்சியின் பேரணியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.