Main Menu

22 மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (24) சான்றுரைப்படுத்தினார்.

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது.

இதற்கு அமைய, பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது. இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் இன்றையதினமும் இடம்பெற்று, மேலதிக வாக்குகளால் இச்சட்டுமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறை திருத்தச் சட்டமூலத்திலும் 4ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அமைய, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.