Main Menu

ஓய்வு பெறும் கடற்படைப் பணியாளர்களை வணிகக் கப்பற்துறைக்குச் சேர்க்கும் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

ஓய்வு பெறும் இலங்கை கடற்படை (SLN) பணியாளர்களுக்கு வணிகக் கப்பற்துறை மற்றும் கடல்சார் துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும், தகைமைச் சான்றிதழ்களை (Certificates of Competency – COC) பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் உயர்மட்டத் தொடர் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.

ஓய்வு பெறும் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவப் பணியாளர்களுக்குத் திறன் மேம்பாடு, தொழில்முறை சான்றிதழ் பெறுதல் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கட்டமைக்கப்பட்ட வழிகளை வழங்குவதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

கடற்படைப் பணியாளர்களின் ஒழுக்கம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்புத் தகுதியை மேம்படுத்தி, வணிகக் கப்பற்துறைக்கான மாற்றத்தை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.

சேவையை நிறைவு செய்த பின்னர் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற கடல்சார் தகைமைகளைப் பெறுவதற்கான தெளிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல்களின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைமைகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வணிகக் கடல்சார் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான வாயில்களைத் திறக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.

மாற்றுச் செயல்முறையின் முழுக் காலப்பகுதியிலும் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலைகளில் உள்ள பணியாளர்களுக்கான முன்னேற்றப் பாதைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறைபாடுகளை அடையாளம் காணும் விரிவான பகுப்பாய்வு, அவற்றை நிவர்த்தி செய்யும் உத்திகள் மற்றும் தற்போதுள்ள கடற்படைத் தகைமைகளின் அங்கீகாரப்படுத்தல் ஆகியவை முக்கியமாக ஆராயப்பட்டன. குறிப்பாக சுழியோடிகள், பொறியியல், மின்சார மற்றும் உணவகச் சேவைப் பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதிலும், அவர்களின் நிபுணத்துவத்தை உரிய முறையில் அங்கீகரித்து பயன்படுத்துவதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடற்படைத் தளபதி, மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி), வணிகக் கப்பற்துறை பணிப்பாளர் நாயகம் (DGMS) ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் வணிகக் கப்பற்துறை செயலகம் (MSS) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்