Main Menu

இந்தோனேசியாவில் விடுமுறை நாட்களில் இலவச உணவுத் திட்டம் நிறுத்தம்

இந்தோனேசியாவில் அரசாங்கத்தின் வீண் விரயங்களுக்கு எதிராகவும், மோசமடைந்து வரும் பொருளாதார நிலையைச் சீரமைக்கக் கோரியும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, விடுமுறை நாட்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்த நாட்டின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் முதன்மைத் திட்டமான இந்த திட்டம், அதிகப்படியான செலவினங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் உணவு நச்சுத்தன்மை சம்பவங்கள் காரணமாக அண்மைக் காலமாகப் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 22 முதல் ஜூலை 13 வரையிலான விடுமுறை காலத்திலும், இனிவரும் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் இந்த உணவு விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தற்காலிக நிறுத்தத்தின் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 168 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சேமிக்கப்படும் என்றும், மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ளும் நோக்கில் பாதீட்டு குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.