Main Menu

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெஹிகல பகுதியிலிருந்து கடுவெல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் இழுக்கப்பட்டிருந்த கேபிள் ஒன்றில் சிக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் பின்னால் பயணித்த அவரது 14 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீரிகம – நால்ல வீதியின் ஹ்குருக்கும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றிலும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நால்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாதசாரி மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் நால்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தெல்விட்ட – கிரிபத்கல்ல வீதியின் கொடமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தெல்விட்ட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவராவார்.

மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிபத்கல்ல பகுதியிலிருந்து தெல்விட்ட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.