காணொளி வெளியிடுவதை நிறுத்துமாறு கொலை மிரட்டல் : இராஜாங்கனை சத்தாரதன தேரர் மீது தாக்குதல்
இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் தான் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோருக்கு இந்த விடயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என இராஜாங்கனை சத்தாரதன தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.
தன் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்து அவர் அண்மையில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலுக்கு பின்னர் வெளியிட்ட காணொளியில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிறிது நேரத்திற்கு முன்பு எனது விகாரைக்கு முகமூடி அணிந்த நிலையில் இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் பருமனானவராகவும் மற்றொருவர் சற்றே மெலிந்தவராகவும் இருந்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து என்னை பலமாக தாக்கினர். எனது மடிக்கணினியையும் தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர்.
காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். அடுத்த முறை வந்தால் உயிருடன் விடமாட்டோம் என்றும் எச்சரித்துச் சென்றனர். அவர்கள் என்னை மிகவும் கடுமையாக தாக்கினர்.
இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் தான் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோருக்கு இந்த விடயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என்றார்.
