அமெரிக்க தாக்குதல் எதிரொலி – ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின. ஆனால், திட்டமிட்டு ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்தது.
எனினும், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தெற்கு ஈரான் பகுதியில் உள்ள குவாஷெம் தீவு, ஜாஸ்க், சிரிக், பந்தார் அப்பாஸ் உட்பட பல நகரங்கள் மீது அமெரிக்க கடற்படை நேற்று கடும் தாக்குதல்களை நடத்தின. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள், ரேடார் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக ஈரான் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் உயர்மட்டக் கூட்டு ராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை கடக்க முயலும் கப்பல் எதுவாக இருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
இதனிடையே, எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
அமெரிக்கா – ஈரான் இடையே விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் கூறி இருந்த நிலையில், மீண்டும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் போர் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தள்ளிப் போவதாகவும் சர்வதேச நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
