வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறை மதிப்பீட்டு திட்டம்
வாகன சாரதிகளுக்கு குறைமதிப்பீட்டுப் புள்ளிகள் முன்னோட்ட முறையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான மரணங்களைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,
வீதிகளில் சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையைக் கட்டுப்படுத்த, பாரம்பரிய விதிமுறைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்றும், வாகன சாரதியின் தரத்தை மேம்படுத்த வலுவான அமுலாக்க நடவடிக்கைகள் தேவை.
கடந்த ஆண்டு இலங்கையில் 2,750 வீதி விபத்து மரணங்கள் பதிவாகியுள்ள, இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் ஆவர்.
முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, சாரதிகனின் உரிமங்களில் 24 புள்ளிகள் ஒதுக்கப்படும்.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களுக்காகப் புள்ளிகள் கழிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட்டால், சாரதி அனுமதிப்பத்திர உரிமத்தை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (DMT) நிலவிய முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக, இந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கான முந்தைய முயற்சிகள் தாமதங்களைச் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
