Main Menu

சென்னையில் மதுபான சாலை தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் ‘யான்சி’ என்ற இலங்கைத் தமிழ் பெண்ணே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று இரவு சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது அங்கு வந்த இரு தரப்பினரிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

நிலைமை கையை மீறிச் சென்றதை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, மதுபான விடுதியை விட்டு உடனடியாக வெளியேற்றினர்.

மதுபான விடுதியை விட்டு வெளியே வந்த பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை.

கோயம்பேடு வீதியில் வைத்து மீண்டும் இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலின் உச்சகட்டமாக, ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், எதிர்தரப்பினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது தங்களது சொகுசுக் காரை மிக வேகமாக ஏற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது காரின் அடியில் சிக்கி யான்சி என்ற பெண் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சிறுமியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், தீவிர சிகிச்சைக்காகச் சென்னை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பொலிஸார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை கோயம்பேடு பகுதியில், பார் தகராறில் பெண் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மற்றும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.