Main Menu

சமீரா மஹ்பூப்தீனை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை – அரசாங்கம் அறிவிப்பு

‘க்ளோபல் சமுத் புளோட்டிலா’ (Global Samud Flotilla) உதவிக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைக் காட்டும், இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென்-கிவீரினால் வெளியிடப்பட்ட காணொளிகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடுமையான கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இலங்கை யுவதியான சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பு, நலன் மற்றும் கௌரவத்தை உறுதி செய்வதற்கும், அவரை விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான உடனடி தூதரக உதவிகளை உறுதி செய்வதற்காக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே இராஜதந்திர வழிகள் ஊடாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சுடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா மக்களுக்கு உதவிகளை ஏந்தி துருக்கியிலிருந்து பயணத்தைத் தொடங்கிய சுமார் 50 படகுகளைக் கொண்ட ‘க்ளோபல் சமுத் புளோட்டிலா’ நிவாரணக் குழுவைச் சேர்ந்த சுமார் 500 மனித உரிமை ஆர்வலர்கள் தற்போது இஸ்ரேலியப் படைகளின் காவலில் உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதைக் காட்டும் காணொளியை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர் பென்-கிவீர் அண்மையில் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளியை ஐக்கிய நாடுகள் சபை, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை மனித உரிமை ஆர்வலரான சமீரா மஹ்பூப்தீனும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.