Main Menu

பிரித்தானியா-விலிருந்து தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம்?

பிரித்தானியாவிற்கு வேலை விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான கடுமையான நிலைப்பாட்டினை உள்துறை செயலாளர் சுபல்லா பிரேவர்மன் (Shabana Mahmood) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான நிரந்தர குடியுரிமை பெறும் தகுதிக்காலத்தை, ஐந்து ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகளாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே அங்கு வசித்து வரும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கு பின்னோக்கிய திகதியிட்டு பொருந்தும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்

இது தற்போது அங்குள்ள தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள விதிகளுக்கு அமைய, திறன்படைத்த பணியாளர் விசா பிரிவில் இருப்பவர்கள் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், புதிய மாற்றங்களுக்கு அமைய இந்தக் கால அளவு இருமடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. சிறப்பாக பட்டப்படிப்பு தகுதிக்கு கீழ் உள்ள பணிகளில் இருப்பவர்கள், குடியுரிமை பெறுவதற்கு இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் அல்லது கடினமான தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.

கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் சுமார் 6.16 லட்சம் பராமரிப்பு பணியாளர்களும் அவர்களது சார்ந்திருப்பவர்களும் பிரித்தானியா வந்துள்ளனர்.

பழைய முறைப்படி இவர்களுக்கான நிரந்தர குடியுரிமை தகுதி அடுத்த ஆண்டு தொடங்க இருந்தது. ஆனால், புதிய சீர்திருத்தங்களின் கீழ் இந்தக் குடியுரிமைப் பாதை முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்தப் பணியாளர்களின் எதிர்காலத் திட்டங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தக் கடுமையான முடிவை நியாயப்படுத்திப் பேசியுள்ள அரசுத் தரப்பு, பொருளாதார ரீதியாக பராமரிப்பு பணியாளர்கள் அரசுக்கு ஒரு சுமையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆளும் தரப்பிலேயே சுமார் 40 எம்பிக்கள் எதிர்ப்பு

ஒரு வெளிநாட்டு பராமரிப்பு பணியாளரால் வரி செலுத்துவோருக்கு சராசரியாக 36,000 பவுண்டுகள் இழப்பு ஏற்படுகிறது. “குடியேறிகள் அனைவருமே பொருளாதாரத்திற்குப் பங்களிக்கிறார்கள்” என்ற பழைய வாதத்தை அரசு தற்போது மறுக்கிறது.

மறுபுறம், அகதிகளுக்கான விதிகளிலும் பெரிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இனி அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமானது அல்ல. அது தற்காலிகமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களது நிலை ஆய்வு செய்யப்படும். அகதிகள் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

அரசின் இந்த முடிவுக்கு ஆளும் தரப்பிலேயே சுமார் 40 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறையாக வரி செலுத்தி வரும் புலம்பெயர்ந்தோரை இது பாதிக்கும் என்றும், சிறுபான்மையினரிடமிருந்து அரசின் மீதான நம்பிக்கையை இது சிதைக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.