ஜெர்மன் வங்கியின் மிகப்பெரிய கொள்ளை; $35 மில்லியன் பெறுமதியான பணம், நகைகள் திருட்டு
ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றதாக அந்நாட்டு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தனர்.
மேற்கு நகரமான கெல்சென்கிர்சனில் நடந்த கொள்ளையில், திருடர்கள் 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கிளைக்கு வெளியே தகவல் கோரி திரண்டனர்.
ஆனால், பாதுகாப்பு படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேற்கு நகரமான கெல்சென்கிர்ச்சனில் உள்ள ஸ்பார்காஸ் சேமிப்பு வங்கியின் (Sparkasse savings bank) ஒரு கிளையில் உள்ள தடிமனான கொன்கிரீட் சுவரைத் துளைத்து கொள்ளையர்கள் உள் நுழைந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி இந்தக் கும்பல் வார இறுதியின் பெரும்பகுதியை உள்ளேயே கழித்ததாகவும், வைப்பு பெட்டிகளை உடைத்ததாகவும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
திங்கட்கிழமை (29) அதிகாலையில் வங்கியின் எச்சரிக்கை ஒலி எழுந்ததைத் தொடர்ந்து இந்தக் கொள்ளை அம்பலத்துக்கு வந்தது.
இந்த நிலையில் வங்கியின் பாதுகாப்பு கேமராக்களில் இருந்து பெறப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பகிரவும்...