Main Menu

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக பொலிஸ் அதிகாரி டெரெக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கறுப்பின அமெரிக்கரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை கொலை செய்த குற்றத்திற்காக, பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், இனவெறி மற்றும் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, இந்த தீர்ப்பை ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஃப்ளாய்டின் சகோதரி பிரிட்ஜெட் ஃப்ளாய்ட் கூறுகையில், ‘பொலிஸாரின் அட்டூழியம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட்டது என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது இருப்பினும், மேலும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்’ என கூறினார்.

அத்துடன், இந்த தீர்ப்பு பொருத்தமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனக்கு முழு விபரங்களும் தெரியாது என ஒப்புக் கொண்டுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, ஜோர்ஜ் ஃப்ளாய்டின் சகோதரர், பொலிஸ் அதிகாரி சாவினுக்கு அதிகபட்ச தண்டனையாக 40 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மே 25ஆம் திகதி, மின்னியாபோலிஸ் நகரில் உள்ள கடை ஒன்றில் கறுப்பினத்தைச் சேர்ந்த 48 வயதான ஜோர்ஜ் ஃப்ளாய்ட், 20 டொலர்கள் போலி நாணயத்தாள்களை தந்ததாக வந்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் ஜோர்ஜ்ஜை விசாரிக்க பொலிஸார் வந்துள்ளனர்,

பொலிஸார் அவரை நெருங்கியபோது ஜோர்ஜ் ஃப்ளாய்ட் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக பொலிஸ் துறை தெரிவித்தது.

இதன்போது டெரெக் சாவின் என்ற பொலிஸ் அதிகாரி, ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டை உடலிபொலிஸ் அதிகாரி டெரெக் சாவி பின்பகுதி மற்றும் கழுத்தை தனது முட்டியை கொண்டு மடக்கி 9 நிமிடங்கள் அழுத்தி பிடித்ததால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தது.

இதனைத்தொடர்ந்து ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி உலகமெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து 45வயதான டெரெக் சாவின் மற்றும் மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது சிவில் உரிமையை மீறிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சாவின் மீது கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்டன. அத்துடன் வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 22 வருடங்கள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...