Main Menu

அவுஸ்திரேலியாவின் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்பு

அவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸுக்கு தெற்கே தொலைதூர பிரதேசத்தில் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கித் தவித்த பெண் 12 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

தம்ரா மக்பீத்-ரிலே (Tamra McBeath-Riley) என்னும் 52 வயதான பெண் நொவெம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அலைஸ் ஸ்பிரிங்ஸில் இருந்து கிளையர் ஹொக்ரிட்ஜ் (Claire Hockridge) மற்றும் ஃபூ ட்ரான் (Phu Tran) ஆகிய இருவருடன் பயணம் மேற்கொண்டபோது அவர்களது கார் ஹியூ ஆற்றுப் படுக்கையில் சிக்கிக்கொண்டது.

இதனால் உதவி பெறுவதற்காக மற்றைய இருவரும் வெளியே சென்றனர். அதனால் தம்ரா மக்பீத்-ரிலே அவரது நாயுடன் காருக்கு அருகில் இருந்துள்ளார்.

இதேவேளை பயணம் மேற்கொண்ட மூவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் ஹெலிகொப்டர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கார் டயரின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற பொலிஸார், கடுமையான நீரிழப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்பீத்-ரிலேயைக் கண்டுபிடித்தனர்.

மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

எனினும் அவரது நாய் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

பகிரவும்...