Main Menu

ஆஸியில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும்: கூகுள் எச்சரிக்கை!

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தின் கூகுள் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறுகையில், ‘ஊடகங்களுக்கு பணம் வழங்க கூறும் இந்த சட்டமூலம், சட்டமாக மாறினால் அவுஸ்ரேலியாவில் கூகுள் தேடுபொறியின் சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை.

இது எங்களுக்கு மட்டுமல்ல அவுஸ்ரேலிய மக்களுக்கும், ஊடக பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு நாளும் எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் ஒரு மோசமான விளைவாக இருக்கும்’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தங்களது தளங்களில் உள்நாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்கு, சம்மந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உரிய பணம் வழங்க வேண்டும், தவறினால் மில்லியன் டொலர்கள் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என அவுஸ்ரேலியா அரசாங்கம், புதிய சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...