Main Menu

எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு சந்திக்க வேண்டியிருக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

அத்துடன் எமது மக்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அதற்காகவே மக்களிடம் அதிகாரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தேசிய பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவருடனும் இது குறித்து பேச்சு நடத்தினோம்.

நாம் பல பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டோம். எனினும், அது தொடர்பாக ஆராய நீண்ட கலந்துரையாடல் தேவை. அதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பல காரணங்கள் கூறப்பட்டது. அப்போது அந்த விடயம் தட்டிக்கழிக்கப்பட்டது.

தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக விவாதிப்பதாகவும் அதில் பலனில்லையென்றும் கூறுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பல யோசனைகளை முன்வைத்தோம். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதில் முன்னேற்றம் எதுவும் காணப்படாததால் பேச்சுக்களை கைவிட்டோம்.

எமது எதிர்பார்ப்புக்களை வீணடித்த முன்னாள் ஜனாதிபதி, நாம் தவறிழைத்ததாக தற்போது எம்மை குற்றம்சாட்டுகிறார்.

இந்த அரசின் ஆட்சிக்காலம் இன்னும் ஒரு வருடமாக உள்ள நிலையில் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை நாம் வழங்குவோம்.

புதிய அரசியலமைப்பை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாமல்விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பாரிய அழிவை சந்திக்க நேரிடும். புதிய அரசியலமைப்பின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...