7000 பேர் நியமன இடை நிறுத்தத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை: துரைரெத்தினம்
7000 பேருக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட நியமனத்தை இடை நிறுத்துமாறு கோரியதை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வேலையற்ற பட்டதாரிகளும், இளைஞர், யுவதிகளும் சிரமப்பட்டு, பொருளாதார கஷ்ரத்துக்கு மத்தியில் பட்டப்படிப்பை முடித்து, ஒருவேளை உணவிற்குக் கூட காத்திருந்து உண்ண வேண்டிய நிலையிலும் தனது தனிப்பட்ட பொருளாதாரத் தேவைகள், குடும்பச் சுமை, ஒருசிலரின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய சுமைகள், இப்படி பல சுமைகளைத் தாங்கி அரசாங்கத்தில் ஒரு பதவி கிடைக்காதா என பல வருட காலமாக அலைந்து திரிந்தனர்.
ஏதோவொரு வகையில் நியமனம் கிடைத்தவுடன் ஏக்கப் பெருமூச்சுடன் அளவு கடந்த சந்தோசத்தில் கடமைக்குச் செல்வதற்கு தயாராக இருந்த நிலையிலும், கடமைக்குச் சென்ற நிலையிலும் திடீரென 7ஆயிரம் பேரினதும் நியமனம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
நல்ல கருத்துக்களை முன்வைக்கும் ஜனாதிபதி 7ஆயிரம் பேரின் நியமனத்தில் உத்தரவு பிறப்பித்திருப்பதென்பது மிகவும் வேதனையை உண்டாக்கியுள்ளது. வழங்கப்பட்ட நியமனத்தை அரசியல் கட்சி ரீதியாகப் பார்க்காமல் உங்கள் அரசின் ஆளுமையுடன் எது நடந்தாலும் மன்னித்து உங்களால் எடுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்து இவ் 7ஆயிரம் பேரினதும் வாழ்க்கைக்கு கண்ணைத் திறக்க வழிசமைக்க வேண்டும். இவர்களின் நியமனம் நிறுத்தப்படுமானால் சிலர் விரக்தியின் விளிம்பில் தள்ளப்படுவார்கள். வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யாமல் தொடர்ச்சியாக இவர்கள் கடமைகளைச் செய்வதற்கு பெருந்தன்மையோடு வழி சமைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இவர்களது நியமனத்தை வழங்குமிடத்து மிகவும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். இந்தச் செய்தி கேட்டதிலிருந்து அவர்கள் ஒவ்வொருவரும் அலைந்து திரிவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆகவே நல்லெண்ணம் கொண்ட நீங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு நிதி அமைச்சுக்கு இந்நியமனத்தை வழங்குவதற்கு உத்தரவுகளை பிறப்பிப்பீர்கள் என்னும் நம்பிக்கையுடன் உங்கள் முன்னுதாரணத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.