500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும்: ஷாய் ஹோப்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்பதை வெஸ்ட் இண்டீஸ் ரிஜிஸ்டர் செய்யும் என ஷாய் ஹோப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. வெஸ்ட் இண்டீஸ் தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 421 ரன்கள் குவித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 86 பந்தில் 101 ரன்களும், தொடக்க வீரர் லிவிஸ் 54 பந்தில் 50 ரன்களும், அந்த்ரே ரஸல் 25 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.
50 ஓவர் உலகக்கோப்பையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 481 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. மேலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 500 ரன்னை எட்டும் முதல் அணியாக இங்கிலாந்து இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நாங்கள்தான் 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற சாதனையை படைப்போம் என ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாய் ஹோப் கூறுகையில் ‘‘500 ரன்களை எட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. முயற்சி செய்தால் இந்த அரிய சாதனையை எங்களால் படைக்க இயலும். 500 ரன்களை எட்டிய முதல் அணி என்ற பெயர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிகப்பெரிய பேட்டிங் ஆர்டரை வைத்திருக்கும் எங்களால் இந்த சாதனையை எட்ட முடியும்’’ என்றார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பிராத்வைட் கூறுகையில் ‘‘இந்த சாதனையை உங்களால் எட்ட முடியுமா?, அதற்கான சாத்தியக்கூறுகள் உங்களிடம் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக இருக்கு என்பேன். எனினும், அதிகாரப்பூர்வமான ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர்கள் வரை சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்க வாய்ப்பில்லை. இதனால், எதார்த்தமான ஸ்கோர் குறித்து நாம் பேசுவது அவசியம்’’ என்றார்.