Main Menu

5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல்- இதுவரை 15 பேர் கைது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தாக்குதல் தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இரவு ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...