Main Menu

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது சக ஜி-7 தலைவர்களை நான் அழைக்கிறேன்.
கொரோனா வைரஸால் அழிக்கப்பட்ட பேரழிவு மீண்டும் நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

2022ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளுக்கு தடுப்பூசி போடுவது மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்’ என கூறினார்.

உலகம் கொரோனா தொற்றுக்கு எதிராக வலிமையுடன் போராடி வருகிற நிலையில், ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு, பிரித்தானியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதில், ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முதன்முதலாக உலக தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிற முதல் மாநாடாக இது அமைகின்றது.

ஏற்கனவே பிரித்தானியாவில் உபரி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு கோவேக்ஸ் அமைப்பின் ஊடாக வழங்குவதாக கடந்த பெப்ரவரி மாதம் பிரித்தானியா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...