Main Menu

20 ஆவது திருத்தம் குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லத் தேவையான எந்த விடயமும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அதிகமானவர்களால் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

20ஆவது திருத்ததிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றபோதும் அதுதொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்த சட்டமூலத்தை அனுமதித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் அலிசப்ரி கூறினார்.

அத்துடன் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கொண்டு நிறைவேற்றுவதற்குரிய எந்த திருத்தமும் இல்லை என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சட்டமா அதிபரும் அதனை தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கும் செல்லவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கும் அரசாங்கம் தயாராகவ இருப்பதாகவும் நீதி அமைச்சர் அலிசப்ரி கூறினார்.

அரசாங்கம் ஒருபோதும் சட்டத்தை மீறி செயற்படப்போவதில்லை என்றும் நீதிமன்றத்தைப் போலவே நாடாளுமன்றத்துக்கும் கவனம் செலுத்துவோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் 1978 அரசியலமைப்புக்கு செல்வதுடன் விரைவான பொருளாதார அபிவிருத்தி ஒன்றை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பகிரவும்...