19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்டுக்குச் சாபக்கேடாகும். அதனை ரத்து செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் அதனை ரத்து செய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு
19ஆவது திருத்தச் சட்டமே காரணமாகும். அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்காகவே சுமந்திரன், ஜயம்பதி விக்கிரமரட்ன ஆகியோரால் இந்தத் திருத்தம் கொண்டு
வரப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. நான் 52 வருட கால அரசியல் வாழ்க்கையில் இருந்திருக்கின்றேன். எதிர்வரும் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எத்தகைய முடிவை எடுக்கின்றதோ, அந்த முடிவுக்கமையவே செயற்படுவேன். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்னமும் எந்தவொரு கட்சியும் முடிவெதனையும் எடுக்கவில்லை. எனவே இந்த விடயத்தில் எத்தகைய அவசரமும் தேவையில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நான் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு தீர்மானத்தை நான் எடுக்கவில்லை. அத்தகைய விடயம் தொடர்பில் எவருடனும் நான் ஆலோசிக்கவுமில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த விடயங்களை எடுத்துக் கூறினார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:
தற்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழுவே நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவுகளை எடுக்கவில்லை. வேட்பாளர்கள் தொடர்பில் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை. கட்சிகளுக்கிடையில் உள்ளக ரீதியிலேயே இது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் அரசாங்கம் நிலைகுலைந்துள்ளது. அதேபோல் அரசியல் கட்சிகளும் நிலை குலைந்தே உள்ளன.
சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளமையால் அதில் போட்டியிடுவீர்களா என்று என்னிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது. 52 வருட எனது அரசியல் வாழ்க்கையில் பல திருப்பங்களை நான் கண்டுள்ளேன். பல மாற்றங்களைச் சந்தித்துள்ளேன். இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் கட்சி எடுக்கும் முடிவுக்கு அமையவே நான் செயற்படு வேன். இன்றைய தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை.
18, 19 ஆவது திருத்தங்கள்
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நான் சில தினங்களுக்கு முன்னர் ஆற்றிய உரை தொடர்பில் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 18 ஆவது, 19 ஆவது திருத்தங்கள் நாட்டுக்கு அழிவைத் தந்திருக்கின்றன. அந்த நிலைப்பாட்டில் நான் இன்றும் உறுதியாக உள்ளேன். 18 ஆவது திருத்தம் நாட்டில் மன்னர் ஆட்சி முறையைத் தோற்றுவித்தது. இதற்கு எதிராகவே நல்லாட்சி அரசாங்கத்தை நாம் உருவாக்கினோம். ஆனால் 19 ஆவது திருத்த சட்டம் நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதும் பாராளுமன்றத்தில் 215 பேரின் ஆதரவுடன் இந்தத் திருத்தத்தை நிறைவேற்றியிருந்தோம். ஐக்கிய தேசிய முன்னணி, மஹிந்த அணி உட்பட பெரும்பான்மையானோரின் ஆதரவைப் பெற்றிருந் தோம்.
தற்போது மஹிந்த ராஜபக் ஷ ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும்போது 18,19 திருத்தங்களுக்கு அன்று நான் ஒத்துழைப்பு வழங்கியிருந்தேன் என்று கூறியிருக்கின்றார். 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது நான் அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன். அதனால் ஆதரித்தேன்.
19ஆவது திருத்தத்தையும் நான் ஆதரிக்கும் நிலைமை.
19ஆவது திருத்தமானது ஜனாதிபதியின் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்குக் கையளிக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த விடயம் உயர் நீதிமன்றத்தின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டபோது ஐக்கிய தேசிய முன்னணியால் அதில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் விடயத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களைக் கொண்டே அது நிறைவேற்றப்பட்டது. இதனால் அந்தச் செயற்பாடு முற்றுமுழுதாக வெற்றியளிக்கவில்லை. இதனைத் தயாரித்தவர்கள் சட்ட அரசியல்வாதிகளா அல்லது சட்ட நிபுணர்களா என்பது எனக்குத் தெரியாது.
இதன் மூலம் ஜனாதிபதிக்கு ஒரு பகுதி அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு ஒரு பகுதி அதிகாரமும் சென்றன. சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதன் மூலமும் எதிர்பார்த்த பயன் கிட்டவில்லை. அரசாங்கத்துக்கு அறிவிக்காமலேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பியிருந்தது. 19ஆவது திருத்தமானது நிலையற்ற அரசியல் தன்மையை நாட்டில் உருவாக்கியதுடன் இரண்டு அரசியல் தலைமைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு சாரதிகளின் செயற்பாடு
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கருத்துத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் என்ற வாகனத்தை இரண்டு சாரதிகள் செலுத்த முடியாது என்று அவர் கூறியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சாரதி ஒருவருக்குத்தான் ஆணை வழங்கியிருந்தனர். ஆனால் அந்த ஆணையை பாராளுமன்றத்தின் மூலம் எடுத்துக்கொண்டு வாகனத்தின் முன் ஆசனத்தில் மற்றொருவர் இருந்து கொண்டார்.
62 இலட்சம் மக்களின் வாக்குகள் மூலம் அனுமதிப் பத்திரம் பெற்ற சாரதி வாகனத்தை செலுத்தும் போது பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரத்தைப் பெற்ற சாரதி முன் ஆசனத் தில் அமர்ந்து கொண்டு அதனை செலுத்த முயற்சிக்கின்றார். அந்தச் சாரதி வாகனத்தின் கியரைப் போடுவதுடன் ஸ்டேரிங்கையும் பிடித்து அங்குமிங்கும் செலுத்த முயற்சிக்கின்றார். இந்த நிலைதொடர முடியாது. இதனால் தான் 19 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று நான் கூறுகின்றேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிட்டாலும் ரணில் போட்டியிட்டாலும் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும். இரண்டு சாரதிகள், இரண்டு அரசாங்கங்கள் ஆட்சி செய்வதை இல்லாதொழிப்பதற்கு இதுவே ஒரேவழியா கும். ஜனாதிபதி மாளிகையில் ஓர் அரசாங்கமும் அலரி மாளிகையில் மற்றோர் அரசாங்கமும் செயற்படுகின்றன.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28,29ஆம் திகதிகளில் 19ஆவது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு என்று கூறப்பட்டு இழுபறிகளுக்கு மத்தியில் 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு 215 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எனவே யாரும் தாம் தவறிழைக்கவில்லை என்று கூறி தப்பித்துவிட முடியாது.
19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு
நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் 19ஆவது திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறும். எனவே அதற்கு முன்னர் இந்தத் திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும். 19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடாகும். அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்காகவே இது தயாரிக்கப்பட்டது. நாட்டுக்கும் மக்களுக்கும் இது உதவப் போவதில்லை. தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் பிரதமர் ரணில், சம்பந்தன், மஹிந்த மற்றும் ஜே.வி.பி.யினர் ஒருமித்த நிலைப்பாட்டை அடுத்து 19ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும். இதன் மூலமே 2020ஆம் ஆண்டில் நாடு முன்னேற்றத்தை அடைய முடியும். இல்லாவிட்டால் நாடு அதலபாதாளத்துக்குள் செல்லும்.
சர்வஜன வாக்கெடுப்பு
தற்போது நான் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தப்போவதாக ஊடகங்களில் செய்தி வருகின்றது. பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நான் அவ்வாறு தீர்மானிக்கவில்லை. அவ்வாறானதொரு எண்ணமும் என்னிடம் இல்லை. இவ்விடயம் குறித்து நான் யாருடனும் கலந்துரையாடவும் இல்லை.
போதைப்பொருள் ஒழிப்பு வாரம்
நாட்டில் சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென போதைப்பொருள் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் மூன்று இலட்சம் பேர் வரையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் கைதிகளையே தடுத்து வைக்க முடியும். ஆனால் 24 ஆயிரம் கைதிகள் சிறைகளில் உள்ளனர். இவர்களில் 60 வீதமானவர்கள் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்கள். இன்று 26ஆம் திகதி போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். இதனை முன்னிட்டும் பல்வேறு நிகழ்வுகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் தவறான செய்திகள்
எனது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது 10 பேருக்குட்பட்டவர்களையே அழைத்துச் செல்கின்றேன். அண்மையில் நான் தஜிகிஸ்தான் சென்று திரும்பியபோது 50 பேருடன் நான் விஜயம் செய்து நாடு திரும்புவதாக வானொலிகளில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இவ்வாறான செய்திகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என்பதை நான் அறிவேன். வெள்ளைநிற பூக்கள் பூக்கும் இடத்திலிருந்துதான் இத்தகைய செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. நான் வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டால் அதன்மூலம் நாட்டுக்கு பய னைப் பெற்றே வருகின்றேன்.
இந்தியப் பிரதமரின் பதவியேற்புக்குச் சென்ற போது அவருடன் நான் தனித்து கலந்துரையாடினேன். நாட்டு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது ஐந்து நிமிடங்கள் எமது நாட்டுக்கு வருகை தந்து செல்ல வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். மாலைதீவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் அவர் மூன்று மணி நேரம் விஜயம் செய்திருந்தார். இதன் மூலம் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் உலகிற்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரது விஜயம் சொல்ல முடியாத அளவுக்கு பெறுமதி வாய்ந்ததாக அமைந்தது.
இதேபோன்றே சீனாவுக்கு நான் விஜயம் செய்தபோதும் சீன ஜனாதிபதியுடனான பேச்சின் போது பாதுகாப்பு தரப்புக்கு 100 ஜீப்கள் வேண்டும் என்று கேட்டேன். உடனடியாகவே அவர் நடவடிக்கை எடுத்தார். இதேபோன்றே கஜகஸ்தானில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
ஆறு மாதங்களுக்கு முன் ரஷ்யாவிடமிருந்து உதவிகளைப் பெற வேண்டாம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. 1971ஆம் ஆண்டு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சேகுவரா கலவரத்தின்போது ரஷ்யா மூன்று மிக் விமானங்களை எமக்கு தந்துதவியிருந்தது. அந்த விமானங்கள் இன்னமும் விமானப்படையினரிடம் உள்ளன. அமெரிக்கா சொன்னதை செய்யாவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிகள் உட்பட பல விடயங்கள் நிறுத்தப்படும் சூழல் உள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம், அமெரிக்க இராணுவத்தினர் தொடர்பான ஒப்பந்தம் என்பவற்றுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
எனவே எனது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை ஊடகங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
கொழும்பு கிழக்கு இறங்குதுறை விவகாரம்
கொழும்பு கிழக்கு இறங்கு துறையின் அபிவிருத்தியில் இந்தியா, ஜப்பான், இலங்கையை உள்ளடக்குவது தொடர்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன் ஏனெனில் இலங்கைக்கான வீதம் குறித்து தெரிவிக்கப்படாமல் ஜப்பான் இதனை முழுமையாக பெறுவதற்கு முயற்சித்திருந்தது. ஆனால் எனது எதிர்ப்பின் பின்னர் இலங்கைக்கு 51 வீதமும் இந்தியாவுக்கு 11 வீதமும் ஜப்பானுக்கு ஏனைய வீதமும் வழங்கப்படும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவை எடுப்பது என்பது குறித்து சுதந்திரக்கட்சியின் தீர்மானத்துக்கு அமையவே செயற்படுவேன் எனக் கூறியுள்ளீர்கள். அவர்கள் உங்களைப் போட்டியிடுமாறு கோரினால் என்ன செய்வீர்கள்?
பதில்: இந்த விடயம் தொடர்பில் சுதந்திரக்கட்சி கலந்துரையாடி வருகின்றது. ஏனைய கட்சிகளுடனும் பேசித்தான் இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி: 19ஆவது திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்று கூறுகின்றீர்கள். தற்போதைய நிலையில் இரு கட்சிக்கொள்கை முரண்பாட்டில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகின்றது இது குறித்து உங்களின் பதில் என்ன?
பதில்: அவ்வாறு இல்லை. அரசியலமைப்பின் படி இரண்டு தலைவர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
கேள்வி: 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் போது பெரும்பான்மை உங்களிடம் உள்ளது. அவ்வாறாயின் அதனை ஏன் ஆதரித்தீர்கள்?
பதில்: அரசியலமைப்பிலே நடைமுறைப்படுத்தும்போதுதான் அதிலுள்ள நன்மை தீமைகள் தெரியவரும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் 50க்கு 50 வீதம் இதன் மூலம் பகிரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்கி பாராளுமன்றத்திற்கு முழுமையாக வழங்கியிருந்தால் பரவாயில்லை. யாராவாது ஒருவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால்தான் நாம் தவறிழைத்துவிட்டோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதனை சரி செய்ய வேண்டும்.
கேள்வி: 19ஆவது திருத்த யோசனையில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் தொடர் பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் எவ்வாறு திருத்தம் நிறைவேற்றப்பட்டது?
பதில்: 19ஆவது திருத்தம் அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய செய்யப்பட்ட அரசியல் சதியாகும். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் வர்த்தமானி பிரகடனத்தின்போது மாற்றியமைக்கப்பட்டிருந்தன.
கேள்வி: 18 ஆவது, 19ஆவது திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றா கோருகின்றீர்கள்?
பதில்:புதிய அரசியல் யாப்பு தேவையில்லை. இவற்றை நீக்கிவிட்டால் பழைய அரசியல் யாப்பு அமுலுக்கு வரும். அதனை நடைமுறைப்படுத்தினால் போதும். எதிரணியினர் கூறுகின்றனர் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்வதுடன் 18ஐ நடைமுறைப்படுத்தலாம் என்று. ஆனால் இரண்டையும் ரத்து செய்யவேண்டும்.
கேள்வி: குருணாகல் வைத்தியர் கருத்தடை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள் ளார். மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்வது நல்லது என்று கோரியுள்ளனர். இது குறித்து உங்களின் கருத்தென்ன?
பதில்: ஆணைக்குழு விடயம் தொடர்பில் தீர்மானிக்க முடியாது. அரச மருத்துவ சங்கத்தின் குழு இவ்விடயம் தொடர்பில் விசாரித்துள்ளது. நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளே முக்கியமானவையாகும். 500 தொடக்கம் 600 பெண்கள் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் ஊடாகவே தீர்மானிக்க முடியும்.
கேள்வி: சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றதா?
பதில்: பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. தேர்தல்கள் நெருங்கும்போது இவ்விடயங்கள் தொடர்பில் தீர்வைக் காணலாம்.
கேள்வி: சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இந்தியாவில் அதற்கான திகதியையும் நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமே உங்களின் பதவிக்காலம் முடிவடைவதாக கூறியுள்ளார்?
பதில்: அது குறித்து எனக்குத் தெரியாது. 19ஆவது திருத்தத்தில் மே மாதம் 15ஆம்
திகதி தான் சபாநாயகர் கையெழுத்திட்டார். எனவே அடுத்த மே மாதம் 15ஆம் திகதி வரை தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் உள்ளது என்ற தர்க்கம் இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் சட்ட வல்லுநர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
கேள்வி: 19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது கூறுகின்றீர்கள். கடந்த நான்கு வருடங்களாக இது குறித்து ஏன் நீங்கள் கவனம் செலுத் தவில்லை?
பதில்: தற்போதுதான் தேர்தல்கள் நடைபெற வுள்ளன. புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் இதனை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் நான் கூறுகின்றேன். அதிகாரங்கள் இரு இடங்களில் குவிந்திருப்பதனால் அரசி யல் நடவடிக்கைகளைத் தொடர முடியாது.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்றும் இல்லையேல் தான் பதவி விலகப்போவதாகவும் தேர்தல்கள் ஆணை க் குழுவின் தலைவர் அறிவித்துள்ளாரே… அது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: அது குறித்து என்னால் ஒன்றுமே கூற முடியாது.
கேள்வி: தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நீங்கள் திருப்தி அடை கின்றீர்களா?
பதில்: நான் திருப்தி அடைகின்றேன். தீவிர வாதக் குழு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் செயற்பாடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் இடம் பெற்றுள்ளது. முழுமையாக அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு உறு திப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தீர்கள். ஆனால் நீடிக்கப்பட்டுள்ளதே?
பதில்: கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந் தும் விசாரிப்பதற்கும் தூதுவராலயங்கள், இராஜதந்திர இல்லங்கள் உட்பட முக்கிய இடங்களுக்கு இராணுவத்தினரின் பாது காப்பை வழங்குவதற்கு அவசர கால சட் டம் நடைமுறையில் இருக்க வேண்டியது அவசியம். சட்டவிரோத அமைப்புகளை தடை செய்வதற்கும் அதற்கான சட்டங்களை உருவாக்கும் வரையிலும் இதனை அமுல் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இன்னும் ஒரு தடவைக்கு மேல் இதனை நீடிக்கும் உத்தேசம் இல்லை.
பகிரவும்...