Main Menu

106 தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுகூரலுக்கும் தடை விதிப்பு- சிவசக்தி ஆனந்தன்

கடந்த 1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலைப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் 106 பேரின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இந்நிலையில், செட்டிகுளம் பகுதியில் நினைவுகூரல் நிகழ்வை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என எச்சரித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கில் நீதி மன்றத்தினுடாக பொலிஸார் தடைத்தரவு பெற்றிருந்தனர்.

இதேபோல், தற்போதும் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதுடன் சமய காலாசார கடமைகளைக்கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் உண்மையான சமாதானம், நல்லிணக்கம் வரவேண்டுமானால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர்நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1984ஆம் ஆண்டு சேமமடு, செட்டிக்குளம், ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களுக்குள் அதிகாலையில் புகுந்த இலங்கை இராணுவத்தினர், தமிழ் மக்களைக் கைதுசெய்தது மட்டுமன்றி சுட்டும், வெட்டியும் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சேமமடு பகுதியில் 52பேரும் ஒதியமலை பகுதியில் 32பேரும் செட்டிகுளம் பகுதியில் 22பேரும் என மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களாவர்.

இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்தவர்களின் நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...