Main Menu

ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவ மனைகளிலேயே விளக்கமறியல்

கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்தத் தவறினார்கள் என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, நேற்றுக்காலை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும்படி இருவருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றுக்காலை கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவில், நெஞ்சு வலி என, ஹேமசிறி பெர்னான்டோ அனுமதிக்கப்பட்டார்.

பூஜித ஜயசுந்தர நாரஹேன்பிட்டிய  காவல்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர்களை நேற்று பிற்பகல் மருத்துவமனைகளில் வைத்தே, குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

இரண்டு மருத்துவமனைகளுக்கும் சென்ற கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன, இருவரையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்தும் மருத்துவமனைகளிலேயே தங்கியிருக்கவும் அனுமதி அளித்தார்.

பகிரவும்...