Main Menu

ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காட்சிஹாங்காங்:

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் இது ஹாங்காங்கின் நீதி சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் சீன அரசாங்கத்திற்கு எதிராக பேசியவர்களை குறிவைக்க பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மக்களின் ஓயாத போராட்டத்துக்கு அடிபணிந்த ஹாங்காங் நிர்வாகம் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. எனினும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்கின்றன.

மேலும், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் தலைவர் கேரி லாம் ராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சத்தை எட்டி போராட்டம் அதிதீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் ஹாங்காங் முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டம் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முடக்கியது. போராட்டக்காரர்களில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹாங்காங்கை ஸ்தம்பிக்க வைத்த இந்த போராட்டத்தை வன்மையாக கண்டித்த நிர்வாக தலைவர் கேரி லாம், “போராட்டத்தால் ஹாங்காங் மிகவும் ஆபத்தான சூழ்நிலையின் விளிம்பில் உள்ளது” என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் மகத்தான சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீனாவின் உயர்மட்ட கொள்கை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் குவாங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் ஹாங்காங்கின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்து, அதை ஆபத்தான படுகுழியில் தள்ளிவிட்டுள்ளன. ஹாங்காங் போலீசாருக்கும், அதன் நிர்வாகத்தலைவர் கேரி லாமுக்கும் சீனா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கிறது.

ஹாங்காங்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு சீனாவின் எதிர்ப்பு சக்திகள் மூளையாக செயல்படுகின்றன. அங்கு நிலவும் அமைதியின்மைக்கு பின்னால் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.

நிலைமையை ஒருபோதும் தவறாக மதிப்பிடாதீர்கள், பலவீனத்திற்கான எங்கள் கட்டுப்பாட்டை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மத்திய அரசாங்கத்தின் உறுதியான தீர்மானத்தையும் மகத்தான பலத்தையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

ஹாங்காங் போராட்டக்காரர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள். அது உங்களுக்கு நல்லது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...