Main Menu

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுக்கு வருகிறது

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை நிறைவடையவுள்ளது. இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் 3 பேர் தமிழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 11 ஆம் திகதி தொடங்கி நடந்து வருகிறது.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 19ஆம் திகதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதோடு, 22ஆம் திகதி வேட்பு மனுக்களை மீளப்பெறும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க.வில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் உட்பட பலர் போட்டியிடுகிறார்கள். அந்தந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர்.

வேலுர் மாவட்டத் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையிலும் தேர்தல் செலவின கண்காணிப்பாளர்களாக வினய்குமார்சிங், ஆர்.ஆர்.என்சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தேர்தலைக் கண்காணிக்க 3 அதிகாரிகளும் வேலூருக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதனிடையே, தேர்தல் நடைபெறும் 1,553 வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பகிரவும்...