Main Menu

வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை – ரணில்

மனித உரிமையை முன்னிறுத்தி, நாட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், வீதிகளில் இறங்கி கூச்சலிடுவோருக்கு அஞ்சி நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் நாம் கைது செய்யவில்லை. சிறைச்சாலையிலும் இந்த விடயத்திற்காக எந்தவொரு மாணவனும் இல்லை.

வசந்த முதலிகே என்பவர் 8-9 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். நான் 21 வயதில் பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்து வெளியேறிய நிலையில், அவரோ 31 வயதாகியும் அங்கு படித்துக்கொண்டிருக்கிறார்.

மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எமதும் நிலைப்பாடு. ஆனால், அராஜகமும் வன்முறையும் மனித உரிமைக்குள் அடங்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவை உண்மையில் மனித உரிமைக்கு முற்றிலும் முரணானவை. மனித உரிமையை முன்நிறுத்தி வன்முறையை நிலைநாட்டுவதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

அதேபோன்று, மனித உரிமையை முன்நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதையும் எம்மால் ஏற்க முடியாது. இன்று மனித உரிமை பாதுகாவலர்கள் என இங்கு பலரும் பேசுகிறார்கள். இவர்கள் அனைவரும் சர்வதேச நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டுதான் இவ்வாறு பேசுகிறார்கள். இதனை இவர்களில் ஒருவரால்கூட மறுக்க முடியுமா?

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த என்றும் இடமளிக்கப்போவதில்லை. அதேநேரம், நான் பொதுத் தேர்தலை ஒருபோதும் பிற்போடவும் மாட்டேன் என்பதை எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறிக்கொள்கிறேன். அதற்கான அதிகாரமும் எனக்கு கிடையாது.

ஆனால், வீதிகளில் கூச்சலிடுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...