Main Menu

விழிக்கும் வரை அழிப்புகள் தொடரும்: அனைத்தையும் இழந்து விட்டு சிந்திப்பதில் பலனில்லை- இந்து இளைஞர் பேரவை!

விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் எனவும் அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை என்றும் சர்வதேச இந்து இளைஞர் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்து மதத்தின் பெயரால் பல அமைப்புகள் உள்ள போதும் தற்போதைய சூழ்நிலையில் அவை பெயரளவில் மாத்திரமே அமைப்புகளாக உள்ளதாக  பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக் குருக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு, குருந்தூர் ஐயனார் ஆலய அழிப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “அண்மைக் காலமாக எமது வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக பல வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டம், குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய வழிபாட்டோடு ஒன்றிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்து எறியப்பட்டு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் மிக வேதனையான செயலாகும்.

தொடர்பே இல்லாத இடங்களில் புதிது புதிதாக இவ்வாறான செயல்களைச் செய்வது திட்டமிட்ட செயலாகவே தோன்றுகின்றது. தற்போது ஏதோ குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு அகழ்வாராச்சிப் பணி என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர். அகழ்வாராச்சிக்கு புத்தபகவான் வர வேண்டிய தேவை என்ன இருக்கின்றது. ஒட்டு மொத்தமாக தமிழர் வழிபாட்டு நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றது.

எமது வழிபாட்டுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இது அனைத்தையும் கண்டும் காணாதது போல் கடந்து செல்கின்றனர். அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகள் அல்லது ஆன்மீக அமைப்புகளும் பெயரளவிலேயே அமைப்புகளாக இருக்கின்றன. அன்றி இனமத நலன்களை கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர்கள், சர்வமதப் பேரவையில் இருப்பவர்கள் என்று பலர் இருக்கின்றனர். அவர்கள் இன, மத நலன்கள் பற்றி எந்த விதமான நடவடிக்கைகளையும் செய்வதாகத் தெரியவில்லை என்பதே உண்மை.

அந்தப் பதவிகள் தமக்கு கௌரவம் என்று நினைக்கின்றனர். ஆக இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து இன, மத நலன்களைக் காப்பாற்ற வேண்டுமே தவிர கடந்து போக நினைக்கக் கூடாது. ஏனெனில், நாளை அது பல இடங்களுக்கும் வரலாம் .

விழிக்கும் வரை அழிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். அனைத்தையும் இழந்த பின்னர் சிந்திப்பதில் பலனில்லை எனவே, இவ்விடயத்தில் உங்கள் எதிர்ப்புகளை வெளியிட வேண்டிய தேவையுள்ளது என்பதை உணருங்கள்” என்றார்.

பகிரவும்...