Main Menu

விமர்சிப்பதனை விடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என கூறுங்கள் – ப.சத்தியலிங்கம்!

எங்களுடன் போட்டிக்கு வருபவர்கள் எம்மை குறை கூறுவதை விடுத்து தாங்கள் 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தோம் என்பதனை சொல்லட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா குளவிசுட்டானில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இருபது வருடங்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் தற்போது வெளியில் ஓடிப்போய் நின்று கூட்டமைப்பு என்ன செய்தது என்று தங்களை தாங்களே கேட்கின்றனர். இது வெட்கப்படக்கூடிய விடயம்.

அரசாங்க கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் போட்டிக்கு நிற்கும் ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி சுயேற்சைக்குழுக்களாக இருந்தாலும் சரி எல்லோரும் மக்களிடம் கேட்பதெல்லாம் கூட்டமைப்பு உங்களுக்கு என்ன செய்தது என்பதேயாகும்.

ஆனால் தாங்கள் என்ன செய்தோம் என்ன செய்யப்போகின்றோம் என்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை. அதைச்சொல்லி வாக்கு கேட்டால் மரியாதை கொடுக்கலாம்.

நாங்கள் என்ன செய்வோம் என மக்களுக்கு சொல்லுவோம். வட மாகாணசபையில் 4 வருடங்கள் அமைச்சராக இருந்தவன். அப்போது வடக்கு மாகாணம் முழுவதும் சுகாதாரத்ததுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பாரிய வேலைத்திட்டத்தினை நாங்கள் செய்துள்ளோம்.

வவுனியா மாவட்டத்தில் 8 புதிய வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத பின்தங்கிய கிராமங்களாக இருந்த சேமமடு, நவ்வி, கண்ணாட்டிகணேசபுரம், கனகராயன்குளம், ஈச்சங்குளம், செட்டிகுளம் மற்றும் பெரியகுளத்தில் சித்த வைத்திய மருத்துவமனை சிங்கள மக்களுக்காக ஈரப்பெரியகுளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே எங்களுடன் போட்டிக்கு வருபவர்கள் எம்மை குறை கூறுவதை விடுத்து தாங்கள் 20 வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தோம் என்பதனை சொல்லட்டும்.

அவ்வாறு செய்திருந்தால் மக்கள் அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள். அவ்வாறு இல்லையானால் அடுத்த 5 வருடமும் இருக்கப்போகின்றேன் என்றால் அந்த 5 வருடமும் என்ன செய்யப்போகின்றேன் என கூறவேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...