Main Menu

விஜய் மல்லையாவுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்து!

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டாம் என பிரித்தானிய அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மல்லையாவை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அவர் அரசியல் தஞ்சம் கோரினால்  அதை ஏற்க வேண்டாம் என்றும் பிரித்தானிய  அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கிங் பிஷர் விமான நிறுவனம் மற்றும் மதுபான நிறுவனத்தை நடத்தி வந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா  வங்கிகளில் 9 000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.

அவரை நாடு கடத்தி அழைத்து வர சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க துறை அதிகாரிகள் முயற்சித்தனர். மல்லையாவை நாடு கடத்த லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து பிரித்தானிய  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து  மல்லையாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சியில்  சி.பி.ஐ.  மற்றும் அமுலாக்க துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்தனர்.

இந்நிலையில்  மல்லையா தொடர்பான வேறு சில சட்ட சிக்கல்கள் பிரிட்டனில் நிலுவையில் இருப்பதால்  அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டது. அவர்  பிரிட்டன் அரசிடம் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...