Main Menu

வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்

கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கற்குளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “1948ஆம் ஆண்டு முதல், மகாவலி அதிகாரசபை, வனவள சபை, வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என நான்கு திணைக்களங்களும் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு தமிழர்களின் நிலங்களை அபகரித்து அந்த நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி அதன்மூலமாக தமிழர்களின் இன விகிதாசாரத்தினை இல்லாதொழிக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

வன்னியில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் தற்போதைய ஆட்சியாளர்களைக் கொண்ட அரசாங்கம் 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகமாக எங்களுடைய பிரதேசத்தில் மகாவலி மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை வைத்து தமிழ் வாக்குகளையும் பிரித்து ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுவருவதற்கு ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இதனூடாக எவ்வாறு கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்தார்களோ அதேபோல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதிவியேற்றதன் பின்னர் தமிழர்களுடைய காணிகளிலும் தமிழர்களுடைய அரச காணி விடயத்திலும் சிங்கள மக்களினுடைய செயற்பாடுகள் அதிகாரத் தொனியில் இருக்கின்றது.

இதற்குக் காரணம் இன்றைய ஆட்சியாளர்கள் செயலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் இராணுவ அதிகாரிகளை நியமித்திருக்கின்றார்கள். இராணுவ அதிகாரிகளை நியமித்ததன் ஊடாக இலங்கை ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சிக்குத் தயாராகின்றதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் இருக்கின்றது.

அவ்வாறான நிலையில் வன்னியில் தமிழர்களுடைய வாக்கு வீட்டுச் சின்னத்தைத் தவிர்த்து வேறு சின்னத்திற்கு செல்லக்கூடாது. அவ்வாறு வாக்கிளத்தால் நாங்களாகவே வன்னியில் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்குவதற்கு வழிவகுத்து விடுவோம்.

ஒரு இராணுவ அதிகாரி இங்கு வேட்பாளராக நிற்கின்றார். நாளை பிரதேச செயலாளரும் இராணுவ அதிகாரியாக வரலாம். இது எமது மக்களுக்குள்ள அச்சுறுத்தலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...