“லெபனானில் இஸ்ரேல் செய்தது போர்க் குற்றம்” – ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு
அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்துள்ளார். லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடித்தவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அவர் எதிர்வினையாற்றியுள்ளார்.இது குறித்து, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறும்போது, “லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தாக்குதல் அனைத்து எல்லைகளையும் அத்துமீறி கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரி தரப்பான இஸ்ரேல் அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று அரங்கேற்றியுள்ள போர்க் குற்றம் இது. எதையும் பொருட்படுத்தாமல் இதனை இஸ்ரேல் செய்துள்ளது. இந்தப் படுகொலை சம்பவம் லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல். அதுதான் எதிரியின் நோக்கமும் கூட” என்றார். அவரது இந்தப் பேச்சு லெபனான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இருப்பினும் அவர் எங்கிருந்து பேசினார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.இந்தப் பேச்சு ஒளிபரப்பானபோது லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டன. வியாழக்கிழமை அன்று ஹிஸ்புல்லா தரப்பிலும் டிரோன் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனான் நாட்டில் மக்கள் போன் போன்ற சாதனங்களை கூட பயன்படுத்த அஞ்சுவதாக தகவல் வெளியாகி உள்ளது.நடந்தது என்ன? – இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால், காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது.காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் லெபனானில் 2 நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 450 பேர் காயம் அடைந்தனர்.பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக சிறப்பான தண்டனையை கொடுப்போம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேல் தனது கவனத்தை லெபானான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது திருப்பியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேலன்ட் தனது படையினரிடம் பேசுகையில், “போரில் நாம் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளோம். அதற்கு தைரியம், உறுதி, விடாமுயற்சி ஆகியவை தேவை” என்றார்.ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்து, தங்களின் தகவல் தொடர்புக்கு பேஜர்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்களின் தகவல் தொடர்பில் இடையூறு ஏற்படுத்தவும், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் லெபனான் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தவும் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதலால் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட வேண்டும். இதனால் இஸ்ரேலின் போர் தற்போது ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை நோக்கி விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.