Main Menu

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்த தெலுங்கானா மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தெலுங்கானா மாணவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

இந்தியாவில்  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளில் வசித்து வரும் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்தவகையில் லண்டனில் வசித்து வரும் இந்திய மாணவர்கள் 59 பேரை கொண்ட ஒரு குழுவினர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 40 பேருக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள 19 பேருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அடைக்கலம் கேட்டு தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு இரவில் உணவும், தங்கும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து வெளியே செல்ல மறுத்து வருகின்றனர். இதனால் அங்குள்ள விசா பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர்.

ஈஸ்டர் விடுமுறைக்காக இந்த மாத இறுதியில் நாடு திரும்புவதற்காக பலர் விமான டிக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அந்த மாணவர்கள் புகார் கூறினர்.

இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

பகிரவும்...