Main Menu

ரஷ்யாவில் ரொக்கெட் வெடித்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கடற்படை மேற்கொண்ட சோதனையின்போது ரொக்கெட் ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) திரவ உந்துவிசை ரொக்கெட் இயந்திரத்தை சோதனை செய்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் உறுதிப்படுத்தியது.

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று ஊழியர்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நியோனோக்சா என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு பேர் இறந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்ய கடற்படை பயன்படுத்தும் ஒவ்வொரு ஏவுகணையையும் சோதனை செய்யும் இடமாக நியோனோக்சா தளம் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக அங்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், கப்பல் மற்றும் விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் கடலில் சோதனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...