Main Menu

ரணில் – சஜித்துக்கு இடையில் முக்கிய சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான முக்கிய உயர்மட்ட  கூட்டம் நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக நிலவும் இழுபறி நிலைமை குறித்தும் உரையாடப்பட்டுள்ளது.

இதன்போது குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமே வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க இதன்போது குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த தகவலை நிராகரித்துள்ள அமைச்சர் மனோகணேசன், பிரதமர் அவ்வாறான கருத்தை கூறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது சஜித்திற்கு ஆதரவான நிலைப்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல் கடிதம் ஒன்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னர் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் வேட்பாளர் குறித்த தீரமானங்கள் எட்டப்படாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...