Main Menu

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (30) பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், அவருக்குப் போதுமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமையே இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கு வழிவகுத்ததா என்பது குறித்துப் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியில் தீவிரமாக உரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ஒளிப்பதிவாளர் மூலமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏதேனும் ஆபத்தை விளைவிப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும் எழுவதாக அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்றக் கடமையொன்றுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்து அங்கிருந்து வெளியேறிய தருணத்தில், அவருக்கு மிக அருகில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.