Main Menu

யூரோ கிண்ண தொடரில் புதிய சாதனைப் படைத்தார் ரொனால்டோ!

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கலின் புகழ் பூத்த வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, புதிய சாதனையொன்றினை பதிவு செய்துள்ளார்.

ஆம்! யூரோ கிண்ண கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில், அதிக கோல்கள் அடித்த வீரர் என சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கிடையிலான ‘யூரோ’ கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் போர்த்துக்கல், உக்ரைன், லிதுவேனியா, செர்பியா, லக்சம்பர்க் அணிகள் இடம் பெற்றுள்ளன.

லிதுவேனியாவின் வில்னியஸ் பகுதியில் நடைபெற்ற போட்டியொன்றில், போர்த்துக்கல் அணியும் லிதுவேனியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 4 கோல்கள் துணையுடன் போர்த்துக்கல் அணி, 5-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இதில் ரொனால்டோ 4 கோல்கள் அடித்ததன் மூலம்,யூரோ கிண்ண கால்பந்து தகுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை அவர் 25 கோல்கள் அடித்துள்ளார்.

இவரையடுத்து, அயர்லாந்தின் ரொபி கேன் 23 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஐரோப்பிய அரங்கில் அதிக கோல் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில், ரொனால்டோ, 160 போட்டிகளில் 93 கோல்கள் அடித்து முதலிடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...