Main Menu

யானையை கண்டுபிடிக்க விசாரணை குழு: மனிதருக்கில்லை – சிவசக்தி ஆனந்தன்

காணாமல் போன ஒன்பது யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசாங்கம் பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை.என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையிலேயே இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்ததன் பிற்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய அனுசரணையோடு பல ஆயிரக்கணக்கான போராளிகளும் , பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். இந்த இராணுவத்திடம் சரணடைந்த அத்தனை குடும்பத்தினரும்  யுத்தம் நிறைவடைந்து இன்றுவரை பத்து வருட காலம் ஆகிவிட்டது.

இந்த குடும்பத்தினருக்கு என்ன நடந்தது. அவர்களுடன் சென்ற கைக்குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரைக்கும் இலங்கை அரசாங்கமும்சரி அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும்சரி இராணுவத்திடம் சரணடைந்த தங்களுடைய குழந்தைகளையும் பெற்றோர்களையும் தேடி 10 வருடகாலமாக போராடிக் கொண்டிருக்கின்ற இந்த மக்களுக்கு எந்தவித பதிலையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் இலங்கையிலேயே 9 பெண் யானைகள் காணாமல் போய் விட்டது என்பதற்காக அதற்கான ஒரு விசாரணை குழுவை கூட இந்த அரசாங்கம் நியமித்திருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய அனுசரணையோடு, ஆதரவோடு, வெள்ளைக் கொடியோடு சரணடைந்த போராளிகள், பொதுமக்கள், அவர்களுடைய குடும்பத்தினர்கள் குழந்தைகளுக்கு இன்றைக்கு 10 வருடகாலமாக இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

காணாமல் போன ஒன்பது பெண் யானைகளை கண்டுபிடிப்பதற்காக விசாரணைக்குழு அமைக்கின்ற இந்த அரசாங்கம் இன்றைக்கு பேருந்துகளில் ஏற்றப்பட்ட இந்த குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெரியாமல் இருக்கின்றது. ஆகவே இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை ஏமாற்றி இருக்கின்றது. இங்கிருக்கின்ற மக்களை ஏமாற்றி இருக்கின்றது. 

ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் இந்த சரணடைந்த காணாமல் போன சிறுவர்கள், குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை காலம் கடத்தாமல் விரைவாக அரசாங்கம் இவர்களுக்கான ஒரு நீதியை பெற்று தரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...