Main Menu

மோடி மந்திரி சபையில் தமிழகத்தில் 2 பேருக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர் ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.

புதுமுகங்களுக்கு மோடி மந்திரிசபையில் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜனதாவில் 165 பேர் புதுமுக எம்.பி.க்களாக இருக்கிறார்கள். மேற்குவங்காளம், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பா.ஜனதா மீண்டும் ஆட்சியை வெல்ல மூளையாக செயல்பட்ட அமித்ஷா மத்திய மந்திரி ஆவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், அரியானா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக அவர் மந்திரியாக மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அமித்ஷா மந்திரியானால் அவர் உள்துறை இலாகாவை கவனிப்பார்.

பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி கொடுக்கிறது. 8 முதல் 10 இடங்கள் வரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு கட்சிக்கு ஒரு மந்திரி பதவி என்ற அளவில் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படும்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து ஆர்.சி. பி.சிங், ராஜீவ் ரஞ்சன்சிங் ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, சிரோன் மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் கிடைக்கலாம். ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய மந்திரி ஆகிறார்.

சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இருந்து சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஹரிஸ்பத்கபூர் மந்திரியாக வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ஆனாலும் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும்.

தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்துக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. மத்திய இணை மந்திரி பதவிதான் தமிழ் நாட்டுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

மோடி பதவியேற்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவ், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பதவியேற்பு விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் 8 ஆயிரம் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...