Main Menu

மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தை குழப்பிவிட்டார் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் தற்பொழுது ஜனநாயகம் சரியாக நிலை நாட்டப்படவில்லை. தேர்தல் திகதியை குறிப்பிடுவதற்கு ஜனநாயக தேர்தல் சட்டங்கள் என்று ஒரு சட்டம் இருக்கின்றது. அதன்படி தேர்தல் திகதியைக் குறிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது. அது வேறு யாருக்கும் இல்லை. இதற்கமைய அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதியை நாங்களும் கண்டபடி குறிக்க முடியாது. 

அதற்கமைய நாங்கள் ஆலோசித்து கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் போகும்போது, ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தோம். அதாவது நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளோம். அதற்குள் நாங்கள் அதைத் தீர்மானிப்போம் என்றும் சொல்லியுள்ளோம். 

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஜனாதிபதி தேர்தல் நடந்தவுடன் ஜனாதிபதி சிறிசேன வெல்லாவிட்டால் அவர் உடனடியாக பதவி விலகி வெற்றி பெறுகின்ற புதிய ஒருவருக்கு ஜனாதிபதிக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும். 

அந்த காரணத்தினாலோ என்னவோ தெரியாது எங்களுடன் பேசி இரண்டு நாட்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் வைத்து டிசம்பர் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். 

ஆக நாங்கள் கொடுத்த காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரையான காலம்தான். ஆனால் தான் எவ்வளவு காலம் கூடுதலாக ஜனாதிபதியாக இருக்கலாமோ அதற்குத் தக்கதாக அவர் திகதியைக் குறித்திருக்கிறார். 

எமது அதிகாரத்தை ஜனாதிபதி அப்படிப் பறிக்கும்போது நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது. ஆகையினால் இத்தேர்தல் என்ன நாள் வைத்தாலும் சரி டிசம்பர் 7 இல் வைக்கக் கூடாதென நான் தேர்தல் ஆணைக்குழுவில் சொல்லி இருக்கின்றேன். 

ஏனெனில் அது எங்களுடைய அதிகாரம் என்று காட்டுவதற்காகவே அவ்வாறு செய்ய உள்ளேன். அதாவது தேர்தல் தொடர்பான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தான் இறுதியில் தீர்மானிக்கும் என்று காட்டுவதற்காகதான் இவ்வாறு சொல்லியுள்ளேன். 

நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 இடையில் எந்த நாள் வைப்பதென்று ஆனைக்குழு தீர்மானிக்கும். ஆனால் ஜனாதிபதி சொன்ன 7 ஆம் திகதி தேர்தல் நடக்காது என்று நான் நம்புகின்றேன். இதை நாங்கள் கவனிக்காமல் விட்டு மரியாதைக்காக 7 ஆம் திகதி நடத்தினால் பின்னர் ஜனாதிபதியாக வருபவரும் எமது ஆணைக்குழுவின் வேறு அதிகாரங்களையும் பறிப்பார். 

ஆனாலும் ஜனாதிபதி அவருக்கு மரியாதை இருக்கிறது. அதற்காக எங்கள் அதிகாரங்களை எடுத்து உபயோகிக்கக்கூடாது. சட்டத்தின்படி நாட்டை நடத்துவதுதான் ஜனநாயகம். சட்டம் இல்லாமல் ஜனநாயகமும் இல்லை. ஆக அந்த இடத்தில் இந்த ஜனாதிபதி ஜனநாயகத்தையே குழப்பிவிட்டார் என்று கூறுகிறோம். 

ஜனநாயக முறையின் அடிப்படையில் நாங்கள் எங்கள் வாக்கை உபயோகித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம். அவ்வாறு பிரதிநிகளைத் தெரிவு செய்த பின்னர் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு கூடிய ஆசனங்கள் இருக்கிறதோ அந்தக் கட்சிதான் பிரதமரை நியமிக்கிறது. அந்தக் கட்சிதான் ஜனாதிபதியுடன் ஆலோசித்து அமைச்சர்களை தெரிவு செய்கிறது. இதுதான் ஜனநாயகம். 

அமைச்சர் பதவியில் இருந்து நீங்க வேண்டும் என்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது ஜனநாயகமா?” என்று கேள்வி எழுப்பினார் ரத்னஜீவன் ஹூல். 

(பிபிசி தமிழ்)

பகிரவும்...