Main Menu

மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர தடை

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலைபாய்ப்புகளை பெறும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டில் பிறப்பித்தார்.

பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற உத்தரவில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சில கொள்கை முடிவுகளை மாற்றினார். 

மூன்றாம் பாலினத்தவர்களாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகள் முடிந்து முழுமையாக ஆணாகவோ, பெண்ணாகவோ மாறி விட்டவர்கள் மட்டுமே இனி முப்படைகளின் பணிக்காக விண்ணப்பிக்க முடியும்.

மனதளவில் மாற்றம்பெற்று, சரியான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உடல்ரீதியாக மாற்றமடையாதவர்கள் பணிகளில் சேர்ந்த பிறகு விடுமுறை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு செல்வதால் ஆள்பற்றாக்குறையும் அரசுக்கு அதிகமான செலவினமும் ஏற்படுவதாக கருதிய டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்க தீர்மானித்து உத்தரவிட்டார்.

இது முற்றிலுமான தடையல்ல, ராணுவத்தில் சேருவதற்காக உளவியல் மற்றும் உடல் கூறியல்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவினரின் பரிந்துரைக்கு பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றும் சுமார் 13 லட்சம் பேரில் மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் 9 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...