Main Menu

மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டர்

மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து தாலுக்காகளிலும் கடந்த 7-ந் தேதி முதல் அந்தந்த வட்டங்களில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை, ஓய்வூதியம், ஊனமுற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மனு கொடுத்தனர்.

அப்போது எல்லப்பன் நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியான ராணியம்மாள் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகன் உதய குமாருக்கு உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க கூட்டத்தில் காத்திருந்தார்.

இதனை கவனித்த கலெக்டர் மகேஸ்வரி உடனடியாக மூதாட்டி ராணியம்மாளை தனது அறைக்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைத்தார்.

பின்னர் அவரிடம் குறையை கேட்டார். அப்போது ராணியம்மாள் கொடுத்த கோரிக்கை மனு மீதான விசாரணையை உடனே கலெக்டர் மேற்கொண்டு உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார். மேலும் அதற்கான கடிதத்தையும், மூதாட்டி ராணியம்மாளிடம் வழங்கினார்.

அப்போது கலெக்டர் மகேஸ்வரி, 80 வயது ஆன போதிலும் மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பதோடு உதவித் தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் வரை வந்து போராடி பெற்றதை பாராட்டி மூதாட்டி ராணியம்மாளின் காலில் விழுந்து வாழ்த்து தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத மூதாட்டி ராணியம்மாள், நெகிழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் கூறி ஆசி வழங்கினார்.

இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பகிரவும்...