Main Menu

முஸ்லீம்களின் அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை எவ்வாறு நம்புவது- அஹமட் புர்க்கான்

முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடக்கு- கிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்முனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அஹமட் புர்க்கான் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தின் மீதான சிறுபான்மையினரின் தவறான புரிதல் காரணமாகதான், சாணக்கியனுக்கு பின்னால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணிக்கு சகல தரப்பினரும் ஆதரவளித்திருப்பது என்பது மிக வெட்டவெளிச்சமான உண்மையாகும்.

இதில் தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லீம் மக்கள் போராட்டத்தை நடாத்துகின்றபோது சிறுபான்மை சமூகத்தில் ஒற்றுமை இடம்பெற்றதாக சிலர் விமர்சனத்தை எழுப்புகின்றார்கள்.இங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் இருவரும் இப்பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.

உண்மையில் இப்பேரணியின் பின்னணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் அரசியல் வங்குரோத்து நிலைமையினை சீர்செய்வதற்காக இந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லீம்களையும் தமிழர்களையும் சீண்டி விட்டிருக்கின்றார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இப்பேரணியினால் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகம் எவ்வித நன்மைகளையும் அடையவில்லை என்பதே எமது கருத்தாகும்.

இப்பேரணியானது தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்த செல்வாக்கினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாடகமாகவே பார்க்கின்றோம். இப்போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை இறுதிநாளில் விரிசல் ஏற்பட்டு இரு பிரிவினராக செயற்பட்ட சம்பவம் அங்கு பதிவாகியுள்ளது.

முஸ்லீம் தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்தில்லை.அத்துடன் புதிய அரசியல் சீர்திருத்தத்திற்காக அரசாங்கம் கேட்டுக்கொண்ட ஆலோசனைகளை இதுவரை முஸ்லீம்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற கட்சிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

அதேபோன்று தமிழ் கட்சிகளை சார்ந்தோர் ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் இப்பேரணியில் வடக்கு- கிழக்கு இணைய வேண்டும் என கூறியே ஆரம்பித்திருந்தார்கள்.அந்தவகையில் முஸ்லீம்கள் குறித்து அபிப்பிராயங்களை கேட்காத தமிழ் கட்சிகளை நம்பி எவ்வாறு வடக்கு- கிழக்கினை இணைக்க ஆதரவு வழங்குவது என்ற கேள்வி எழுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...