Main Menu

முல்லை நீதிமன்றில் சுமந்திரன் கடும் வாதம்: மாவீரர் நாள் வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு!

முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்குமாறு கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் மீதான  கட்டளை எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படும் என முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பொலிஸ் நிலைய பொலிஸார், கடந்த 20ஆம் திகதி, மாவீரர் நாள் நினைவுகூரலை மேற்கொள்வதற்கு எதிராக 46 பேர் மீது முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக இன்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் நிர்வாக உறுப்பினர் சுப்பிரமணியம் பரமானந்தம், தமிழ் ஆர்வலர்களான தம்பையா யோகேஸ்வரன், ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலா ஆகியோர் அடங்கிய பதின்நான்கு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதற்கமைய இன்று குறித்த வழக்கு விசாரணைகள் நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகளில் தடைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக மன்றில் ஆஜரான பிரதான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த மாவீரர் நாள் நினைவுகூரலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மன்றில் முன்வைத்த கடுமையான வாதத்தினையடுத்து, குறித்த வழக்கின் கட்டளையினை வழங்குவதற்காக நீதவான் எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமைக்கு வழக்கினைத் திகதியிட்டுள்ளார்.

பகிரவும்...