Main Menu

முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் சிறையில் வைத்தே விசாரணை – நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமுலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அமுலாக்கத் துறையினர் விசாரணை நடத்தலாம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு நாட்களும், காலை 10 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரையும் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அப்போது அவரிடம் சில ஆவணங்களைக் காட்டி விளக்கம் பெற வேண்டும் என்றும் அமுலாக்கத் துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் ப.சிதம்பரம் கடந்த ஓகஸ்ற் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இதே விவகாரத்தில் அமுலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 22ஆம் திகதி பிணை வழங்கியிருந்தது.

இதையடுத்து, அமுலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் பிணை வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 15ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னால் நேற்று நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமுலாக்கத் துறைக்கு அறிவிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, அமுலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக வரும் 25ஆம் திகதிக்குள் பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 26ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமுலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்...