Main Menu

முதலாவது ஒருநாள் போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது அவுஸ்ரேலியா!

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 71 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலைப் பெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 67 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் 60 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சகன் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 259 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 41 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்ரேலியா அணி 71 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 40 ஓட்டங்களையும், டொம் லதம் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுளையும், ஜோஷ் ஹசில்வுட் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 27 ஓட்டங்களையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திச சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவு செய்யப்பட்டார்.

பகிரவும்...