Main Menu

மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டம்- இராணுவம் கையெறி குண்டுத் தாக்குதல்!

இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மியன்மாரின் யாங்கோனில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தைக் கலைப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ஸ்டன்ட் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

யாங்கோனின் தெற்கு நகரமான டேவியில், ஆயிரக்கணக்காக ஒன்றுகூடிய எதிர்ப்பாளர்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு ஜனநாயக ஆட்சியை வலியறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அந்நாட்டின் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சித் தலைமையின் பெருமளவான பிரதிநிதிகளை இராணுவம் தடுத்துவைத்துள்ளது.

ஏறக்குறைய 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் பின்னர் ஜனநாயகத்தை நோக்கிய தற்காலிக முயற்சிகள் முறியடிக்கப்பட்ட தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், உலக நாடுகள் மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருவதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன.

இதேவேளை, மியன்மாரில் பல நகரங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களை முடக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதில் கடந்த புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாத்திரம் 38 பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...