Main Menu

மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளது – இரஷ்யா குற்றச்சாட்டு

மாலி நாட்டு பொதுமக்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்துள்ளதாக இரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

மாலி நாட்டில் ‘சடலங்கள் சில மண்ணுக்குள் புதைக்கப்படுவது’ போன்ற புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தம்மை முன்னாள் இராணுவ வீரர் என அடையாளப்படுத்தும் Dia Diarra எனும் ஒருவரது கணக்கினூடாக வெளியிடப்பட்ட அந்த புகைப்படத்துடன், “இந்த சடலங்களை பிரெஞ்சு இராணுவத்தினர் புதைத்துள்ளனர். ‘இனிமேலும் பிரெஞ்சு இராணுவத்தினரின் இத்தகைய செயலை பொறுத்துக்கொள்ள முடியாது!” எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள Gossi இராணுவத் தளம் அருகே இந்த சடலங்கள் புதைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டில் கடந்த பல வருடங்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரெஞ்சு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த வாரத்தில் மேற்குறித்த Gossi இராணுவ தளத்தினை மாலி இராணுவத்தினரிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையிலேயே இந்த சடலங்கள் புதைக்கப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. Gossi இராணுவ தளத்தில் பிரெஞ்சு இராணுவத்தினர் கடமையில் இருக்கும் போது இந்த ‘மனித படுகொலையை’ பிரெஞ்சு இராணுவத்தினர் மேற்கொண்டதாக மேற்படி டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை என மறுத்துள்ள பிரெஞ்சு இராணுவத்தினர், இது இரஷ்ய ‘கூலிப்படையின்’ சதி வேலை என தெரிவித்துள்ளது. இச்செயலை இரஷ்யாவின் தனியார் இராணுவ படையான (*கூலிப்படை என பிரெஞ்சு அதிகாரிகளால் குறிப்பிடப்பட்ட) Wagner அமைப்பினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இச்செயலை இரஷ்ய கூலிப்படையினரே மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு தம்மிடம் காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும், ட்ரோன் கருவிகள் (ஆளில்லா சிறிய விமானம்) உதவியுடன் இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...