Main Menu

மஹிந்தவுக்கு ஆதரவாக அமையுமென்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்தோம் – யோகேஸ்வரன்

இம்முறை வரவு- செலவுத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக அமைந்திருக்கும் என்பதனாலேயே  அரசாங்கத்தை ஆதரித்தாக  அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு- ஐயன்கேணி ஸ்ரீ நாகதன்பிரான் ஆலய மூலஸ்தான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,

எங்கள் மண்ணிலே நாம் நியாயமான அரசியல் தீர்வினைப் பெற்று சுதந்திரமாக எங்களை நாங்களே ஆளவேண்டும். தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்ற ரீதியில் சகல வசதிகளும் எமக்கு  வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினோம்.

வரவு – செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை தொடர்பாக பலர் விமர்சனம் முன்வைக்கிறார்கள். இந்த வரவு – செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா என்பதை  தெரிவு செய்யவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.

நாங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் அதேவேளை மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற வகையில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக கடந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத் திட்டங்கள் மக்கள் நலன்களுக்காக மேற்கொள்ளப்பட்டன. 

அதேபோன்று இந்த ஆண்டு 180 மில்லியன் ரூபா நிதியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பாடசாலைகள், வீதிகள் வணக்கஸ்தலங்களின் அபிவிருத்தி செய்யப்பட்டன.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை மீள் கட்டியெழுப்பபுவதற்கு 38 மில்லியன் டொலர் நிதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான நிதி வழங்குனர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டுக்கு வருகிறார். அமைச்சரவை அனுமதி விரைவாக வழங்க வேண்டும் என பிரதமரைக் கேட்டுள்ளேன். அமைச்சர் றிஷாட் பதியுதீன் அதற்கு ஆதரவு தர முன்வைந்துள்ளார். தேசிய கடதாசி ஆலையைக் கட்டியெழுப்பி மூன்று இன மக்களும் தொழில் செய்யும்வகையில் நடவடிக்கையெடுக்கப்படும்.

மாவட்டத்தில் சிறிய தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கையெடுத்து வருகின்றோம். விஷேட திறனாளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம்.

கிரான் பாலம் விரைவாக அமைக்கப்படவுள்ளது. இதற்கு 2500 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகிறது. நாங்கள் அபிவிருத்தி ஒருபுறம் மேற்கொண்டு அபிலாசைகளுக்காகவும் இராஜதந்திர ரீதியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் முயற்சிகள் ஒருபோதும் தோல்வியுறாது என்றார். 

பகிரவும்...