Main Menu

மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டம்!

சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக்காக நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்கு, வடக்கு எனப் பிரித்து அதிகாரிகளுக்கு இரு அதிகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளையில் அலுவல் ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இரு பகுதிக்கான அதிகாரமும் ஒருவருக்கே வழங்கி செயற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் 4 மகளிர் பொலிஸ் நிலையங்கள் உட்பட 22 பொலிஸ் நிலையங்களிலும் சுமார் 2ஆயிரத்து 300இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணி புரிகின்றனர்.

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் பொலிஸ் நிலைய எல்லையை கருத்திற்கொண்டு நிர்வாக வசதிக்கென தல்லாகுளம், அண்ணாநகர், கூடல்புதூர், அவனியாபுரம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களை இரண்டாகப் பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை ஒன்றும் தயராக்கப்படுகிறது.

சென்னை நகரில் குற்றங்களைத் தடுக்க, குறிப்பிட்ட பகுதியில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், திருச்சியிலும் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது. மதுரையிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் குற்றச்செயல், விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்ட நிலையில் இதற்கான அறிக்கை தயாரித்து, பொலிஸ் தலைமை அதிகாரியிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்பதுடன் அதன்பிறகே இந்த புதுத்திட்டத்தை அமுலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...